Tag Archives: Vijay’s Simplicity

இளையதளபதி விஜய்- ரசிகனின் பார்வையில்!

image

விஜய்- பல கோடி இதயங்களை உள்ளடக்கிய ஒரு உருவம். வெறும் சினிமா நடிகன் தானே என்றால், ஆம்! சினிமா நடிகன் தான். அப்படிப் பார்த்தால் அனைவருமே ‘சாதாரண’ மனிதர்கள் தான் என்பது என் பதிலாக இருக்கும். ஒரு இளைஞர் தான் முன்னுக்கு வரும் வரை அனைவரையும் அதிகமாய் மதிப்பது, வியக்க வைக்கும் அளவுக்குத் தன்னடக்கம் காட்டுவது, எல்லோரையும் ஒன்றாக மதிப்பது, இதெல்லாம் தான் இன்றைய யதார்த்தம். ஆனால் மக்கள் செல்வாக்கில் உச்சியை அடைந்த பிறகும் ஒரு மனிதனால் எல்லோரையும் ‘சமமாக’ நினைத்து, எல்லோருக்கும் நேரம் ஒதுக்க முடிகிறதென்றால் அவர் தான் விஜய்!

அவர் எவ்வளவு வெற்றிப் படங்கள் கொடுத்துள்ளார், வசூலில் எவ்வளவு சாதனைகள் படைத்துள்ளார் என்பதெல்லாம் புதிதாகச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஒரு அசாத்திய வேகம் கொண்ட நடிகனாகவும் அமைதியே வடிவமான மனிதனாகவும் தான் இதுவரை விஜய் தன்னை வெளி உலகத்துக்குக் காட்டிக்கொண்டது. தான் எப்படிப்பட்ட இதயம் கொண்டவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்ட அவர் விரும்பியதே இல்லை, நிஜமாகவே நல்ல மனிதர்களாக வாழ்பவர்கள் அதை விரும்பவும் மாட்டார்கள்!

ரசிகனாக ஒருவனுக்கு விஜய்யை ஏன் பிடிக்கிறது? எனக்குத் தெரிந்து சினிமா நடிகராக இருக்கும் ஒருவர் ‘அண்ணா’ என்று பெரும்பான்மை ரசிகர்களால் அழைக்கப்படுவது இதுவே முதல்முறை. தன்னுடைய திரைப்படங்களில் பொழுதுபோக்குக் காட்சிகள் இருக்கலாம் ஆனால் மையக் கருத்து தன் ரசிகர்களைத் தவறான பாதையில் அழைத்துச் செல்வதாய் அமைந்துவிடக் கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருப்பவர். தான் வேறு தன்னுடைய ரசிகர்கள் வேறு என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியதே இல்லை போலும். இல்லையென்றால் தனக்குப் பாலாபிஷேகமும் பேனர் அலங்காரங்களும் செய்யும் அவர்களுக்காகத் தன்னுடைய ஓய்வு நேரத்தில் பாதிக்கு மேல் ஒதுக்க வேண்டிய தேவை என்ன? இவர் வெளியில் வந்தாலும் வரவில்லை என்றாலும் ரசிகன் ஓயப்போவது இல்லை. அப்படி இருக்கையில் அவனுக்கும் உள்ளம் என்று ஒன்று உண்டு என இங்கு எவ்வளவு பேர் மதிக்கிறார்கள்? ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. ஒருமுறை விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துகொண்டு விட்டு அவர் வீடு திரும்பும்போது மணி அதிகாலை 2. மறுநாள் தன்னுடைய ரசிகர் ஒருவரின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக முன்பு ஒத்துக்கொண்டபடி அவர் சென்றது அதிகாலை 6 மணிக்கு. என்ன அவசியம்? “நான் Tired ஆக இருக்கிறேன்” என்று ஒரு வார்த்தை சொன்னால் அந்த ரசிகன் தன் திருமணத்தையே தள்ளி வைக்கும் அளவுக்கு உயரத்தில் இருக்கிறார். ஆனால் காதலுக்கு மரியாதை போல அவ்வளவு களைப்பிலும் ரசிகனுக்கு மரியாதை.. அவரால் மட்டுமே முடியும்!

அவரால் பலனடைந்தவர்கள் திரையுலகத்துக்குள்ளும் வெளியிலும் மிக அதிகம். ஆனால் தன்னால் தான் அவர்கள் பயனடைந்தார்கள் என்று சொல்லச் சொல்லி அவர்களை என்றைக்கும் வற்புறுத்தியது இல்லை. அவரது சினிமாக்களில் உறவுகளுக்கு ஒரு ஆத்மார்த்தமான இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். நடிகன் என்று தனிமைப்பட்டுவிடக் கூடாது, மக்களோடு மக்களாய் இருக்க வேண்டும் என்ற அவரது விருப்பம் அவருடைய ஒவ்வொரு அசைவிலும் வெளிப்படுவதை நீங்கள் கவனிக்கலாம். மறைந்த தனது தங்கை வித்யாவுக்கு பதிலாக இன்று எத்தனை ஆயிரம் தங்கைகள்.. தம்பிகள்.. உண்மையில் கொடுத்து வைத்தவர் விஜய். உதவிகள் பல செய்கிறார். எத்தனையோ குழந்தைகளைப் படிக்க வைக்கிறார். செய்தவைகளை ஒரு நாளும் சொல்லிக் காட்டியதில்லை. விஜய்யிடம் இருந்து அவருடைய ரசிகர்கள் கற்றுக்கொண்டது என்ன? நடிகனின் ரசிகர்கள் என்ற அடிப்படையில் அதிக அளவிலான நலத்திட்ட உதவிகள் செய்வதிலும் ரத்த தானம் செய்வதிலும் விஜய் ரசிகர்கள் முதலிடத்தில் இருக்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். இப்போது புரிந்திருக்கும்!

எல்லாவற்றையும் விட அவர் சந்தித்திருக்கும், சந்தித்து வரும் சோதனைகள். ஒன்றா இரண்டா? திரையுலகம், அரசியல், பொறாமைப் புண்ணியவான்கள் என இவருக்கு எதிரிகள் இல்லாத இடமே இல்லை.. பல அமைப்புகள் இவரை எதிர்த்த பப்ளிசிட்டியில் தான் இன்று இயங்கிக் கொண்டிருக்கின்றன. சினிமாத் துறைக்கு எளிதாக வந்துவிட்டார் என்று எதிரிகள் தினமும் பாட்டாய்ப் படித்தாலும், இன்று அவர் சந்தித்து வரும் பிரச்சனைகள் வேறு ஒருவருக்கு வந்திருந்தால் எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டுத் தலைதெறிக்க ஓடியிருப்பார். துன்பங்கள் உச்ச நிலையில் இருக்கும்போது அத்தனையையும் மனதுக்குள்ளேயே வைத்துக்கொண்டு வெளியில் ஒரு சிரிப்பு ஒன்று சிரிப்பார் பாருங்கள்.. எல்லா வயதுக்காரர்களும் வசியம் செய்தது போல் அவரிடம் மயங்கிக் கிடப்பதற்கு இது முக்கியக் காரணம். துயரங்களை ‘அமைதியாய்’ தாங்கி சிகரங்களைத் தொடுவதில்  நிச்சயம் இந்த மனிதர் ஒரு  Rolemodel தான்.

விஜய்யின் மிகப்பெரிய பலம், இவருக்கு ரசிகர்களாய் இருப்பவர்கள் ஒவ்வொருவரும் இவரை அணுஅணுவாய் ரசித்து ரசிகரானவர்கள். அதனால் தான் நடிகன் என்பதைத் தாண்டி சகோதரனாய் உணர முடிகிறது அவர்களால். சுற்றி இருக்கும் யாரிடமும் கிடைக்காத ஒரு மகிழ்ச்சியும் ஆறுதலும் எங்கோ இருக்கும் ஒருவரின் முகத்தைப் பார்க்கும்போது கிடைக்கிறதென்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அதைத் தான் விஜய் ரசிகர்கள் செய்கிறார்கள்!

இளைய தளபதியின் புன்னகைக்குப் பின்னால் பல லட்சம் உயிர்களின் நிம்மதி மறைந்திருக்கிறது. அது அவருக்கு என்றும் நிலைக்க வேண்டும்.. வாழ்வில் உயர அவரது ரசிகர்களும் அவர்போல உழைக்க வேண்டும்!

வாழ்த்துக்களுடனும் நன்றியுடனும்,
அண்ணாமலை

Keywords:

Vijay , Ilayathalapathy Vijay , Vijay Birthday , Superstar Vijay , Vijay Birthday Article , Vijay’s Humbleness , Vijay’s Simplicity ,  Vijay Fans , Ilayathalapathy Vijay Fans , June 22 , Welfare Activities of Vijay and Vijay Fans , Vijay Makkal Iyakkam

Advertisements