Tag Archives: Family

திகட்டாத உறவுகள்!

image

ஒரு குறிப்பிட்ட காலம் வரை இனிக்கும் உறவுகள் அதன் பின் கசந்து விடக் காரணம் என்ன? நீண்ட நாட்களாக என்னை உறுத்திக் கொண்டிருக்கும் கேள்வி இது. அதிகமாக அதை நேரில் கண்டு கொண்டிருப்பதால் கூட இருக்கலாம். காதலுக்கு மட்டும் தான் நாளடைவில் இந்த மாற்றம் நிகழும் என்பார்கள். ஆனால் அனைத்து உறவுகளுக்குமே இவ்வாறு நடப்பது என்னை நிறைய யோசிக்க வைக்கிறது. ஏன் இவர்களால் உறவுகளை நீட்டிக்க முடிவதில்லை?

புதியதாய் எதையாவது கண்டுபிடித்து, புதிதாய்ப் பார்த்து, புதுமையாய் வாழ்வதே இன்றைய உலகுக்கு மிகவும் பிடித்த வாழ்க்கை. உறவுகள் என்றாலே ஆரம்பத்தில் தான் புதிது. நாட்கள் செல்லச் செல்லப் பழையதாகி விடும். இதில் வேடிக்கை என்னவென்றால் உறவுகள் மட்டும் பழையது ஆகாமல் அவர்கள் மீது வைத்த அன்பின் அளவும் குறைந்து விடுவது தான். Its Boring, let me try someother என்று வீடியோ கேம்களுக்கு வேண்டுமானால் சொல்லலாம், வீட்டு உறவுகளுக்குச் சொல்லலாமோ? பணத்தை எதிர்பார்க்காமல் நமக்குக் கொடுக்கப்பட்டுக்கொண்டே இருப்பது அன்பு மட்டும் தான். ஆனால் பணம் கொடுத்து வாங்கும் விஷயங்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இலவசமாக அன்பு செலுத்துபவர்களுக்குத் தரப்படுவதில்லை. மரியாதை என்பதை விட முக்கியத்துவம் என்று தான் சொல்ல வேண்டும். நம்மை மதிக்காதவர்கள் மீது தேடித் தேடிச் சென்று அன்பைப் பொழியும் நாம் நம் அருகில் இருப்பவர்களைக் கண்டுகொள்வதே இல்லை. தூரத்தில் இருந்தால் சர்க்கரை என்றும் அருகில் இருந்தால் மிளகாய் என்றும் நமக்கு நாமே தீர்மானித்துக் கொண்டோம். கூடவே இருப்பவர்களைக் கண்டால் ஏனோ பிடிக்காமல் போகிறது. அவர்கள் என்ன தவறு செய்தார்கள் என்ற கேள்விக்கும் பதிலில்லை. அதிகமான அன்பு இப்படிப்பட்ட சூழ்நிலையை உருவாக்கும் என்று நீங்கள் கேள்விப்பட்டதையும் இதையும் இணைத்துக் குழப்பிக்கொள்ளக் கூடாது.

கணவன் மனைவிக்குள் தான் இந்த வேற்றுமையை நான் அதிகம் பார்த்திருக்கிறேன். திருமணம் ஆன புதிதில் அவர்களுக்குள் இருக்கும் அன்னியோன்னியத்தை விவரிக்க ரேஷன் கடையில் நிற்கும் க்யூவின் அளவுக்குக் கையை விரிக்க வேண்டும். காதல் மயக்கத்தில் அநியாயத்துக்குக் கற்பனைக் குதிரையை அவிழ்த்து விடுவர். எதிர்காலத்தைப் பற்றி மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருவருக்குள்ளும் ஏற்பட்டு விடும். “உன் முகத்தையே என் ஆயுளின் கடைசி நிமிடம் வரை பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்” என்று பெருமையாக இருவரும் கூறிக்கொள்வர். இதெல்லாம் உண்மையிலேயே கடைசி வரை இருந்தால் வாழ்க்கை சொர்க்கமாக அல்லவா இருந்திருக்கும்! ஆனால் காலத்தின் கோலத்தில் மனிதரின் உண்மையான எதிர்பார்ப்புகள் மிகச் சிறியதாய் அமைந்துவிடுகின்றன. திருமணம் ஆகி 2 மாதங்கள் கழித்து அவர்கள் பேசிக்கொள்ளும் விதமே வேறு மாதிரி இருக்கிறது. மிக வேகமாக சலித்து விடுகிற உறவாகத் திருமண உறவு தான் இருக்கிறது. ஒரே முகத்தை மீண்டும் மீண்டும் பார்க்க இவர்களுக்கு ஏன் பிடிக்கவில்லை? தம்பதிகள் இருவரும் வாழ்க்கையை சுவாரசியமாக்கிக் கொள்ளாதது தான் காரணம். உடல் தேவைகள் முடிந்த பின்பு உள்ளத்துக்கான தேவை உருவாக வேண்டும். ஆனால் அதற்கு இடம் தராமல் ஒருவரை ஒருவர் ‘காதலிக்காமல்’ போவது தான் விரும்பத்தகாத விளைவுகளுக்குக் காரணம். கணவன் மனைவி என்றவுடன் ஏதோ ஜெயிலுக்குள் அடைத்தது போல் உணராமல் சின்னச் சின்னக் குறும்புகளும் விளையாட்டுக்களும் இருந்து கொண்டே இருக்க வேண்டும். ஒருவர் பேசுவதை இன்னொருவர் ரசிக்க வேண்டும். மனதளவில் இருவரும் எப்போதும் இளைஞர்கள் போல் உணர வேண்டும். காமத்தைத் தாண்டியது இல்லற வாழ்வு. தாண்டினால் தான் அறுபதாம் கல்யாணம் எல்லாம். இல்லையெனில் 25லேயே விவாகரத்து செய்துவிட்டுப் போகலாம். எதற்கு மாறி மாறித் திட்டிக்கொண்டு வெறுப்பு காட்டிக்கொண்டு ஒரு வாழ்க்கை?

திருமணமான என் நண்பர் ஒருவரின் வீட்டில் அவரது தாய் தந்தையையும் அவர்களோடு ஒன்றாக வைத்து வாழ முடிவு செய்து அழைத்து வந்தார். தாத்தா பாட்டியைப் பார்த்த பேரன் பேத்திக்கு அவ்வளவு குஷி அப்போது. புதுப் பலகாரம் தானே இனிக்கும்? நாளாக நாளாக அவர்கள் மீது இருந்த அன்பும் மரியாதையும் அக்குழந்தைகளுக்குக் குறைந்து கொண்டே வந்தது. தினமும் பார்ப்பதாலோ என்னவோ அவர்கள் மீது ஒரு சலிப்புத் தட்டியது. மரியாதை இல்லாமல் கூட பேசத் தொடங்கினர். அவர்களை ஏதோ வேண்டாத ஒரு பொருள் போல பார்க்கத் தொடங்கினர். இதை எல்லாம் பார்த்துக்கொண்டு பெரியவர்களுக்கு மனம் வலித்தாலும்.. என்ன செய்வது? முதுமை காரணமாக வேறு வழி இல்லாமல் பொறுத்துக் கொண்டிருந்தனர். மாதம் ஒருமுறை பார்க்கும்போது குழந்தைகளுக்கு இருந்த பாசம் ஏன் இப்போது இல்லை என யோசித்த நண்பர், தன் தாய் தந்தைக்குத் தனியாக ஒரு வீடு பார்த்து, வேண்டிய வசதிகள் செய்து கொடுத்து, வேலைக்கு ஆளும் வைத்துக் கொடுத்தார். பெரியவர்களை அருகில் வைத்து அவமானப்படுத்துவதற்கு இது எவ்வளவோ மேல் என்று தான் எனக்கும் தோன்றியது.

அன்பு தயாரிக்கும் தொழிற்சாலையான மனிதன் எந்த ஒரு சக மனிதரையும் பழசு, புதுசு, இது நம்மை விட்டு எங்கும் போகாது, இதற்கு நாம் தான் கதி என்று எண்ணிவிடாமல் நம் அன்பையும் காதலையும் புதுப்பித்துக் காட்டிக்கொண்டே இருந்தால் யாருடைய உறவும் நமக்கு சலித்துப் போகாது!

Tags:

Relationships , Love , Family , Affection , Boring Relationship , Grandparents , Husband and Wife , Human Values , New Generation

Advertisements