அரசியல் பேசும் இளைஞர்களின் கவனத்திற்கு!

image

“அரசியலா? அது ஒரு சாக்கடைப்பா” – இளைஞராக இருந்தாலே இந்த டயலாக்கைத் தவறாமல் பிரயோகிக்க வேண்டும் என்பது இப்போது  எழுதப்படாத விதியாகிவிட்டது. அப்படி என்ன கோபம் அரசியல் மீது என்று சத்தியமாக எனக்குப் புரியவில்லை. மக்களாட்சி என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் செய்யும் ஆட்சி என்பதுதானே தவிர இந்த வயதுக்காரர்கள் தான் செய்ய வேண்டும் என்று எந்தச் சட்டமும் இல்லை. இருப்பவர்கள் தவறு செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு நாளடைவில் இயல்பாக எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டது தான் நாம் சந்தித்திருக்கும் மிக வேதனையான மாற்றம். ஏதாவது நல்லது நடக்க வேண்டும் என்று துடிக்கும் இளைஞர்கள் அதைப் பிறர்தான்  செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களே தவிர தாங்கள் செய்ய முயல்வதில்லை. இது அவர்களின் இயலாமையா அல்லது ஆர்வமின்மையா என்பது கேள்விக்குறியே.

அரசியல் சாதாரண விஷயமல்ல என்பது மறுக்க முடியாத உண்மைதான். அந்தக் கடலில் நீந்த முயற்சி செய்து பல பெரிய மீன்களே காணாமல் போயிருக்கின்றன. அப்படி இருக்கையில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த பையனால் எப்படி இதில் வெல்ல முடியும், எப்படி நிற்கவாவது முடியும் என்ற கேள்வி என்னை சிந்திக்கத்தான் வைக்கிறது. நம்முடைய வாழ்க்கையையே எடுத்துக் கொள்ளுங்களேன். நம்மாலும் நம் குடும்பச் சூழ்நிலையாலும் எதைச் செய்ய முடியுமோ அதை மட்டும் தான் நாம் செய்து கொண்டிருக்கிறோமா என்றால் நிச்சயமாக இல்லை. எதிலுமே சில தடைகளையும் விதியின் விளையாட்டுகளையும் தாண்டிச் சென்று தான் நாம் தினம் தினம் ஜெயித்துக்கொண்டிருக்கிறோம். உடைக்கப்படுவதற்காக உருவாவது தான் தடை என்பது நமக்கு நன்றாகவே தெரியும். எவ்வளவோ போராட்டங்களை தைரியமாக எதிர்கொள்ளும் இளைஞர்கள் அரசியலையும் ஒரு கை பார்க்கலாமே என்பது என் கருத்து. பிள்ளைகள் வேறு ஏதாவது துறையில் நுழையும் கனவு வைத்திருந்தாலே எதிர்க்கும் பெற்றோர்கள் அரசியலில் நுழைய அனுமதிப்பார்களா என்றால் என்னிடம் பதில் இல்லை. தன் குடும்பம் தன் வீடு என்று மட்டும் இல்லாமல் இன்னும் கொஞ்சம் பெரிய மனதுடன் நாட்டையே தன் குடும்பமாய்க் கருதும் பக்குவம் அரசியலில் வேண்டும். நம்மை நம்பிப் பல பேரும் செலவழிக்கக் கையில் பணமும் இருந்தால் அது தானாக வந்துவிடும்.

இளைஞர்கள் அதிகமாய் அரசியலுக்குள் வர வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியதே நாட்டைத் திருத்த வேண்டும் என்ற எண்ணத்தால் மட்டுமல்ல. இன்றைய இளம் ஆண்களும் பெண்களும் அரசியலைத் தரம் தாழ்ந்து விமர்சிப்பதைப் பார்த்துப் பார்த்து தான். பொதுவாகவே இளம் வயதில் தனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருக்கும். அது இன்றைய இளைஞர்களுக்கு சற்று அதிகமாகவே இருக்கிறது. அதற்காக அரசியல்வாதிகள் செய்யும் தவறுகளை எல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க வேண்டுமா என்றால், இல்லை! நம்முடைய மனக்குமுறல்களை வெளிப்படுத்தவும் தவறு நடந்தால் எதிர்த்துக் குரல் கொடுக்கவும் நமக்கு முழு உரிமை இருக்கிறது. ஆனால் எத்தனை நாளைக்குத்தான் இதே நிலையில் இருப்பது? நாம் பயந்து ஒதுங்குகிறோம் என்று தெரிந்து தானே நம்மை அடிக்கிறார்கள்? ஏன் ஒரு மாற்றத்துக்காக நாமே களமிறங்கக் கூடாது என்பது தான் நான் முன்வைக்கும் பிரதானமான கேள்வி. என்னைப் பொறுத்தவரைக்கும் ஒரு தவறு நடக்கிறதென்றால் அதைச் சரி செய்யும் திறன் நமக்கு இருக்க வேண்டும், நாம் அதை விமர்சிக்க வேண்டும். இல்லையென்றால் இதுதான் நம் விதி என்று அமைதியாகிவிட வேண்டும். எனக்கு வயது 23 தான். என் வயதுக்காரர்கள் மீதே இவ்வளவு கோப உணர்வு காட்டுகிறேனே என யோசிக்கிறீர்களா? அரசாங்கங்களை விமர்சிக்கும் இளைய ரத்தங்கள் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்குபவர்களாக இருந்தால் என்னை விட மகிழ்ச்சி அடைபவன் யாருமே இல்லை. ஆனால் இங்கு பெரும்பாலும் தங்களின் கேலி விளையாட்டுகளுக்கே அரசியலைப் பயன்படுத்துகிறார்கள். நல்ல சிந்தனையுள்ள, உடலிலும் உள்ளத்திலும் வலிமை கொண்ட இளம் சிங்கங்கள் இந்தக் காட்டுக்குள் நுழைந்தால் சில காலத்துக்குள்ளாகவே சிங்கம்  தான் என்பதை நிரூபித்து விடலாம். அப்படிப்பட்ட சாமானிய சாணக்கியர்கள் அரசியலுக்கு வந்தால் அரசியல் எவ்வளவு தூய்மையாகும்? மேலேயே வர முடியாமல் துடிக்கும் அடிமட்ட ஏழையின் வயிறு எவ்வளவு அழகாய்க் குளிரும்? தவறு செய்ய வேண்டும் என்று நினைக்கும்போதே அயோக்கியனுக்கு எவ்வளவு பயம் வரும்? இதெல்லாம் நடக்க மாட்டேன் என்கிறதே என்ற அங்கலாய்ப்பின் எதிரொலி தான் இந்தக் கட்டுரையின் உரம்.

‘முதல்வன்’ பட அரங்கநாதன் நம்மைப் பார்த்து சவால் விடும்போது அதைத் துணிச்சலாக எதிர்கொண்டு ஜெயிக்கும் புகழேந்தியாக நாம் இருக்க வேண்டுமா இல்லை மற்றுமொரு மனிதனாக இவ்வுலகில் வாழ்ந்து யாருக்கும் பயனின்றி இறக்க வேண்டுமா?

Keywords:

Youth , Politics , Youngsters, Youth Power , Youngsters in Politics , Political growth , Political Challenge , Mudhalvan , Young Blood , Politics in Social media

Advertisements

2 thoughts on “அரசியல் பேசும் இளைஞர்களின் கவனத்திற்கு!

  1. நன்று. . தன்னை போன்ற இளைஞர்களை ஊக்குவிக்கும் இக்கட்டுரை பாராட்டிற்கு உரியதே. பல விசயங்களை பல்வேறு கோணங்களில் பார்க்கும் நம் இளைஞர்கள், அரசியலை மட்டும் ஒரே கோணத்தில் பார்க்கிரார்கள் என்பது உண்மையே. இந்த நிலை கட்டாயம் மாற வேண்டும்.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s