Monthly Archives: May 2015

உண்மைக் கல்வி வேண்டும்!

image

“பையன் நைட் கிளாஸ் முடிச்சுட்டு 5 மணிக்கு தான் வந்தான். இதோ 7 மணிக்குத் திரும்ப ஸ்கூலுக்குப் போயிடுவான்” – 10ஆம் வகுப்புப் படிக்கும் குழந்தைகளின் நிலை இது. எப்படியோ தொடங்கிய கல்வி முறை இன்று எப்படியோ ஆகிவிட்டது கால மாற்றத்தில். “மாணவர்களை அங்கேயே வைத்துக்கொண்டு என்ன தான் செய்கிறீர்கள்?” என்றால் “கல்வி கற்றுக்கொடுக்கிறோம்” என்கிறார்கள். எது கல்வி? குருகுலத்தில் ஒழுக்க நெறிமுறைகள் கற்று வாழ்வில் பக்குவம் அடைய வழிவகுத்தது ஆரம்ப காலக் கல்வி. ‘தேர்வு’ என்ற ஒன்று எப்போது வந்ததோ அப்போதே அடிவாங்கத் தொடங்கியது எம் இந்திய இளைஞனின் கனவுகள். பழையவைகளைக் கிளற வேண்டாம். இன்றைய நிலையைப் பார்ப்போம். பெற்றோர்கள் உழைக்கிறார்கள். கடுமையாக உழைக்கிறார்கள். தம் பிள்ளைகள் நன்றாகப் படித்துப் பெரிய ஆளாக வர வேண்டுமென உழைக்கிறார்கள். ஆனால் தங்கள் குழந்தைகளுக்கு உண்மையில் என்ன அறிவு கற்றுக் கொடுக்கப்படுகிறது என்று ஒரு பெற்றோருக்காவது தெரியுமா? தெரிந்தும் அதை ஆதரிப்பவர்களும் இருக்கிறார்கள். ஒரு உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், சென்ற தலைமுறையை விட இந்தத் தலைமுறை மாணவர்களுக்குத் தான் பொது அறிவை வளர்த்துக்கொள்ளும் ஆசை நிறைய இருக்கிறது. வெளி உலகைத் தெரிந்துகொண்டு தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் ஆசை இருக்கிறது. ஆனால் துரதிருஷ்டவசமாக அவர்களின் கனவுகளுக்கு முழுவதுமாக முட்டுக்கட்டை போடுகிறது இன்றைய கல்விமுறை. மயான அமைதியில் ஒரு தேர்வு அறை. பயமுறுத்துவது போல் ஒரு ஆசிரியர் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருப்பார். கேள்விகள் அடங்கிய பேப்பர் ஒன்று கையில் தரப்படும். மனதுக்குள் பக் பக் என்ற சத்தம் கேட்கும். 3 மணி நேரம் அவகாசம் தரப்படும். இதை எல்லாம் கேட்டவுடன் ஏதோ மனிதன் அவனின் இறுதி ஊர்வலத்தில் பயணிப்பதுபோல் தோன்றும் உங்களுக்கு. சரிதான். உணர்வுகளையும் சுய அறிவையும் கட்டிப்போட்ட அந்த 3 மணி நேரத்தில் தான் அவனுடைய வாழ்வு தீர்மானிக்கப்படுகிறது. “அறிவு கிடைத்து என்ன பயன்? வாழ்க்கைல செட்டில் ஆனாப் போதும். அதுக்கு இந்தக் கல்விதான் கரெக்ட்” என்று நீங்கள் கூறுபவரானால் கடவுள் தான் உங்களைக் காப்பாற்ற வேண்டும்.

எதற்குமே ஒரு அர்த்தம் வைத்து வாழும் நாடு இந்தியா. அதனால் தான் குழந்தைகளும் பெற்றோரும் கூட மேலைநாடுகள் போல் தள்ளி வாழாமல் ஒன்றோடு ஒன்றாக வாழ்கிறோம் இங்கு. குழந்தைகளை ஆளாக்க வேண்டும் என்ற கடமை உணர்வுக்குக் காரணமும் அதுவே. அப்படி இருக்கையில், ஒன்றுமே கற்றுக்கொடுக்காத படிப்பு முறையை மட்டும் எப்படி ஆதரிப்பது? பால் முகம் மாறாத குழந்தையை பள்ளிக்குப் பொதி மூட்டை சுமந்து நடக்க வைக்கும் நிலைமையை என்னவென்று சொல்வது? தொட்டவைக்கெல்லாம் போராட்டம் செய்யும் நாட்டில் இந்தக் கல்வி அடிமைத்தனத்தை எதிர்த்துக் குரல் கொடுக்க ஒரு ஆள் இல்லை. “நாம் தான் படித்து முடித்துவிட்டோமே மற்றவர்கள் எப்படிப் போனால் நமக்கென்ன?” என்ற எண்ணம் கூட அதற்குக் காரணமாக இருக்கலாம். “தனக்கு வந்தால் தான் தெரியும் தலைவலியும் வயிற்று வலியும்” என்பார்கள். உள்ளுக்குள் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் வெளியில் இருந்து அறிவுரை கூறிக்கொண்டிருக்கும் பெரியவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை. தப்பித் தவறி ஏதோ ஒரு குழந்தை இக்கல்வி முறையில் உள்ள இன்னல்களைப் பெற்றோரிடமோ ஆசிரியரிடமோ பகிர்ந்துகொண்டால் அக்குழந்தைக்கு படிப்பில் ஆர்வம் இல்லாதது போல் சித்தரிக்கப்பட்டு ஒதுக்கி வைக்கப்படுகின்றது. மன உளைச்சல் அதற்கு தினசரி உணவாய் வழங்கப்படுகிறது.

“கண்ணை மட்டும் விட்ருங்க. வேற எங்க வேணும்னாலும் அடிங்க. என் பிள்ளை மார்க் வாங்குனாப் போதும்” என்று சொல்லும் பல ‘பாசமிகு’ பெற்றோரைப் பார்த்திருக்கிறேன். குழந்தைகள் எப்படி நீங்கள் படும் கஷ்டங்களைப் புரிந்து கொள்வதில்லையோ அதைப்போல அவர்களின் இந்தச் சுமையையும் நீங்கள் புரிந்து கொள்வதில்லை என்பதே உண்மை. அதிவேகமான வாழ்க்கை உங்களிடம் நிதானமாக யோசிக்கும் தன்மையைப் பறித்துவிட்டது. “நாங்களும் இதே கல்வியைத் தானே படித்துவிட்டு வந்திருக்கிறோம்?” என நீங்கள் வினவலாம். அன்றைக்கெல்லாம் நீங்கள் தேர்ச்சி பெற்றாலே அது உலக சாதனையாய்க் கருதப்பட்டது. பாடங்களின் இன்றைய கடினத்தன்மைக்கும் அன்றைய தன்மைக்கும் மலையளவு வித்தியாசங்கள் உள்ளன. மாணவர்களுக்குக் கொடுக்கப்படும் மன அழுத்தங்களும் அப்படியே. கல்வி என்றால் கற்றுக்கொள்வது என்ற நிலை வரவேண்டும். ஒரு இந்தியனின் மூளை 5 அமெரிக்க மூளைகளுக்குச் சமம். ஆனால் அவை அனைத்தும் ஆட்டு மூளைகளாகவே நடத்தப்பட்டு குழம்பு வைத்து உண்ணப்படுகின்றன. நம் நாட்டில் யார் என்ன அநியாயம் செய்தாலும் ஏதோ ஒரு தீய நோக்கத்துடன் தான் செய்வார்கள். ஆனால் நல்லது செய்கிறோம் என நினைத்துக்கொண்டு இவர்கள் செய்யும் முதல் அநியாயம் இந்தக் கல்வி முறைதான். இது மிக விரைவில் மாற்றி அமைக்கப்பட வேண்டும். பல சிந்தனையாளர்கள் உருவாவதை இந்த மனப்பாட முறை தடுத்துக் கொண்டிருக்கிறது. அறிவை விரிவு செய்ய பள்ளிக்கூடத்தையும் கல்லூரியையும் பயன்படுத்தும் செயல்முறைக் கல்வி உருவாக்கப்பட்டு அமலாக்கப்பட வேண்டும். இன்று என்ன நடக்கிறது என்பதை மாணவனும் ஆசிரியரும் பகிர்ந்துகொண்டு நாட்டுக்கு நலம் புரியும் நிலை வரவேண்டும். நம் நாட்டின் பல பள்ளிகளில் சரளமாக ஆங்கிலம் பேசக் கற்றுத்தரப்படுகிறது. ஆனால் ஆங்கிலம் என்பது அறிவல்ல என்று நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை.

அரசும் ஆசிரியர்களும் பெற்றோரும் சிந்திக்க வேண்டிய நேரமிது. பல நேரங்களில் சிந்திப்பதோடு மட்டுமே நிறுத்திக் கொள்கிறோம். ஒரு விஷயத்தை இங்கு பகிர்ந்துகொண்டால் ‘செயல்படவும்’ தொடங்கி விடுவோம் என்பது என் எண்ணம்:

இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் இந்தக் கல்வி முறையும் தேர்வு முடிவுகளும் ஏற்படுத்திய மன உளைச்சல்களால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 16000க்கும் மேல்.. நாளை அது உங்கள் குழந்தையாகவும் இருக்கலாம்!

Tags:

Education , Children , Kids , Education System , Parents , Government , Exams , Mental Stress , Suicide , Knowledge

Advertisements

திகட்டாத உறவுகள்!

image

ஒரு குறிப்பிட்ட காலம் வரை இனிக்கும் உறவுகள் அதன் பின் கசந்து விடக் காரணம் என்ன? நீண்ட நாட்களாக என்னை உறுத்திக் கொண்டிருக்கும் கேள்வி இது. அதிகமாக அதை நேரில் கண்டு கொண்டிருப்பதால் கூட இருக்கலாம். காதலுக்கு மட்டும் தான் நாளடைவில் இந்த மாற்றம் நிகழும் என்பார்கள். ஆனால் அனைத்து உறவுகளுக்குமே இவ்வாறு நடப்பது என்னை நிறைய யோசிக்க வைக்கிறது. ஏன் இவர்களால் உறவுகளை நீட்டிக்க முடிவதில்லை?

புதியதாய் எதையாவது கண்டுபிடித்து, புதிதாய்ப் பார்த்து, புதுமையாய் வாழ்வதே இன்றைய உலகுக்கு மிகவும் பிடித்த வாழ்க்கை. உறவுகள் என்றாலே ஆரம்பத்தில் தான் புதிது. நாட்கள் செல்லச் செல்லப் பழையதாகி விடும். இதில் வேடிக்கை என்னவென்றால் உறவுகள் மட்டும் பழையது ஆகாமல் அவர்கள் மீது வைத்த அன்பின் அளவும் குறைந்து விடுவது தான். Its Boring, let me try someother என்று வீடியோ கேம்களுக்கு வேண்டுமானால் சொல்லலாம், வீட்டு உறவுகளுக்குச் சொல்லலாமோ? பணத்தை எதிர்பார்க்காமல் நமக்குக் கொடுக்கப்பட்டுக்கொண்டே இருப்பது அன்பு மட்டும் தான். ஆனால் பணம் கொடுத்து வாங்கும் விஷயங்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இலவசமாக அன்பு செலுத்துபவர்களுக்குத் தரப்படுவதில்லை. மரியாதை என்பதை விட முக்கியத்துவம் என்று தான் சொல்ல வேண்டும். நம்மை மதிக்காதவர்கள் மீது தேடித் தேடிச் சென்று அன்பைப் பொழியும் நாம் நம் அருகில் இருப்பவர்களைக் கண்டுகொள்வதே இல்லை. தூரத்தில் இருந்தால் சர்க்கரை என்றும் அருகில் இருந்தால் மிளகாய் என்றும் நமக்கு நாமே தீர்மானித்துக் கொண்டோம். கூடவே இருப்பவர்களைக் கண்டால் ஏனோ பிடிக்காமல் போகிறது. அவர்கள் என்ன தவறு செய்தார்கள் என்ற கேள்விக்கும் பதிலில்லை. அதிகமான அன்பு இப்படிப்பட்ட சூழ்நிலையை உருவாக்கும் என்று நீங்கள் கேள்விப்பட்டதையும் இதையும் இணைத்துக் குழப்பிக்கொள்ளக் கூடாது.

கணவன் மனைவிக்குள் தான் இந்த வேற்றுமையை நான் அதிகம் பார்த்திருக்கிறேன். திருமணம் ஆன புதிதில் அவர்களுக்குள் இருக்கும் அன்னியோன்னியத்தை விவரிக்க ரேஷன் கடையில் நிற்கும் க்யூவின் அளவுக்குக் கையை விரிக்க வேண்டும். காதல் மயக்கத்தில் அநியாயத்துக்குக் கற்பனைக் குதிரையை அவிழ்த்து விடுவர். எதிர்காலத்தைப் பற்றி மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருவருக்குள்ளும் ஏற்பட்டு விடும். “உன் முகத்தையே என் ஆயுளின் கடைசி நிமிடம் வரை பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்” என்று பெருமையாக இருவரும் கூறிக்கொள்வர். இதெல்லாம் உண்மையிலேயே கடைசி வரை இருந்தால் வாழ்க்கை சொர்க்கமாக அல்லவா இருந்திருக்கும்! ஆனால் காலத்தின் கோலத்தில் மனிதரின் உண்மையான எதிர்பார்ப்புகள் மிகச் சிறியதாய் அமைந்துவிடுகின்றன. திருமணம் ஆகி 2 மாதங்கள் கழித்து அவர்கள் பேசிக்கொள்ளும் விதமே வேறு மாதிரி இருக்கிறது. மிக வேகமாக சலித்து விடுகிற உறவாகத் திருமண உறவு தான் இருக்கிறது. ஒரே முகத்தை மீண்டும் மீண்டும் பார்க்க இவர்களுக்கு ஏன் பிடிக்கவில்லை? தம்பதிகள் இருவரும் வாழ்க்கையை சுவாரசியமாக்கிக் கொள்ளாதது தான் காரணம். உடல் தேவைகள் முடிந்த பின்பு உள்ளத்துக்கான தேவை உருவாக வேண்டும். ஆனால் அதற்கு இடம் தராமல் ஒருவரை ஒருவர் ‘காதலிக்காமல்’ போவது தான் விரும்பத்தகாத விளைவுகளுக்குக் காரணம். கணவன் மனைவி என்றவுடன் ஏதோ ஜெயிலுக்குள் அடைத்தது போல் உணராமல் சின்னச் சின்னக் குறும்புகளும் விளையாட்டுக்களும் இருந்து கொண்டே இருக்க வேண்டும். ஒருவர் பேசுவதை இன்னொருவர் ரசிக்க வேண்டும். மனதளவில் இருவரும் எப்போதும் இளைஞர்கள் போல் உணர வேண்டும். காமத்தைத் தாண்டியது இல்லற வாழ்வு. தாண்டினால் தான் அறுபதாம் கல்யாணம் எல்லாம். இல்லையெனில் 25லேயே விவாகரத்து செய்துவிட்டுப் போகலாம். எதற்கு மாறி மாறித் திட்டிக்கொண்டு வெறுப்பு காட்டிக்கொண்டு ஒரு வாழ்க்கை?

திருமணமான என் நண்பர் ஒருவரின் வீட்டில் அவரது தாய் தந்தையையும் அவர்களோடு ஒன்றாக வைத்து வாழ முடிவு செய்து அழைத்து வந்தார். தாத்தா பாட்டியைப் பார்த்த பேரன் பேத்திக்கு அவ்வளவு குஷி அப்போது. புதுப் பலகாரம் தானே இனிக்கும்? நாளாக நாளாக அவர்கள் மீது இருந்த அன்பும் மரியாதையும் அக்குழந்தைகளுக்குக் குறைந்து கொண்டே வந்தது. தினமும் பார்ப்பதாலோ என்னவோ அவர்கள் மீது ஒரு சலிப்புத் தட்டியது. மரியாதை இல்லாமல் கூட பேசத் தொடங்கினர். அவர்களை ஏதோ வேண்டாத ஒரு பொருள் போல பார்க்கத் தொடங்கினர். இதை எல்லாம் பார்த்துக்கொண்டு பெரியவர்களுக்கு மனம் வலித்தாலும்.. என்ன செய்வது? முதுமை காரணமாக வேறு வழி இல்லாமல் பொறுத்துக் கொண்டிருந்தனர். மாதம் ஒருமுறை பார்க்கும்போது குழந்தைகளுக்கு இருந்த பாசம் ஏன் இப்போது இல்லை என யோசித்த நண்பர், தன் தாய் தந்தைக்குத் தனியாக ஒரு வீடு பார்த்து, வேண்டிய வசதிகள் செய்து கொடுத்து, வேலைக்கு ஆளும் வைத்துக் கொடுத்தார். பெரியவர்களை அருகில் வைத்து அவமானப்படுத்துவதற்கு இது எவ்வளவோ மேல் என்று தான் எனக்கும் தோன்றியது.

அன்பு தயாரிக்கும் தொழிற்சாலையான மனிதன் எந்த ஒரு சக மனிதரையும் பழசு, புதுசு, இது நம்மை விட்டு எங்கும் போகாது, இதற்கு நாம் தான் கதி என்று எண்ணிவிடாமல் நம் அன்பையும் காதலையும் புதுப்பித்துக் காட்டிக்கொண்டே இருந்தால் யாருடைய உறவும் நமக்கு சலித்துப் போகாது!

Tags:

Relationships , Love , Family , Affection , Boring Relationship , Grandparents , Husband and Wife , Human Values , New Generation

காமம் இல்லாக் காதல்!

image

உலகமே அலைந்து கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை ‘வேண்டாம்’ என்று தலைப்பு வைத்திருக்கிறானே, ஒருவேளை எழுத்தாளனாக நற்பெயர் வாங்க நடிக்கிறானோ? என்ற உங்கள் மனக் கேள்வி புரிகிறது. வாழ்க்கையில் நடப்பவை அப்படியே பதிவு செய்யப்பட வேண்டும் என நினைப்பவன் நான். என் எழுத்துக்களும் அவ்வாறே அமைந்திருக்கும். ஓகே இப்போ விஷயத்துக்கு வருவோம். காதல் என்பது உலகின் அத்தனை தெய்வீகமும் அத்தனை உண்மைகளும் அத்தனை தூய்மைகளும் கலந்தது என்றே நம் சமூகமும் சினிமாக்களும் நமக்குப் பயிற்றுவித்திருக்கின்றன. அவ்வழியிலேயே மனவோட்டதைச் செலுத்தும் நாம் முக்கியத்துவத்தை எதற்குக் கொடுக்கிறோம் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.

வெளிநாட்டுக் காதல் கலாச்சாரத்தைக் கண்டபடி கேலி செய்யும் நாம் இன்று செய்து கொண்டிருப்பது மிகப் பெரிய கேலிக்கூத்து. இங்கு எதுவுமே தொடங்கும்போது பரிசுத்தத்தின் அடையாளமாகத் தொடங்குவதும் பின் போகப் போக ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பு’ ஆவதும் தான் வழக்கம்! அதே நிலை தான் காதலுக்கும். கலாச்சாரம் என்று எடுத்துக்கொண்டால் இந்தியக் கலாச்சாரத்தை அடித்துக்கொள்ள ஆளே இல்லை. அவ்வளவு அழகாக செதுக்கப்பட்டது. ஆனால் ‘ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது’ என்பது போல் எழுதி வைப்பதால் மட்டுமே பெருமை வந்து விடாது. வாழ்ந்து காட்டுவதில் தான் பெருமை. இந்தியனுக்கு ஏற்படும் மிகப்பெரிய சிக்கலே, அவன் மீது அதிகமான கட்டுப்பாட்டுச் சுமைகள் விதிக்கப்பட்டு, அழுத்தம் தரப்பட்டு, ஒரு கைதியைப் போல் நடத்தப்படுவது தான். நல்லவனாக வாழும் ஒருவனின் மனம் கூடத் தவறை நோக்கிப் பயணிக்க இதுதான் காரணம்.

காதல் என்றால் இரு மனங்கள் சேர்வது என்று அவனுக்கு சொல்லப்படுகிறது, இரு உடல்கள் சேர்வது என்பது போலவே காட்டப்படுகிறது. எவ்வளவு பெரிய முரண்? அயல்நாடுகளில் ஒருவர் இன்னொருவருடன் பிடிக்கும்வரை வாழலாம் பின் பிரிந்து செல்லலாம் என்ற நடைமுறை உள்ளது. இதை நாம் விமர்சிக்காத கிண்டல் செய்யாத மேடைகளே கிடையாது. ஆனால் அங்கு அறிவித்துவிட்டுத் தவறு செய்கிறான் இங்கு திரை மறைவில் அவனை விட அதிகமாகத் தவறு செய்கிறான் என்று சொன்னால் நம்புவீர்களா? அதுதான் கசப்பான உண்மை. காமத்துக்கு அடிமையான இவன் அடிப்படைக் காதலுக்கான தத்துவத்தையே அதற்கேற்றபடி மாற்றி வைத்திருப்பது தான் வேதனை. ஒரு பெண்ணையோ ஆணையோ அடைய வேண்டும் என்றால் அதற்கான நுழைவுச் சீட்டாகப் பயன்படுத்தவே இன்று காதல் தேவைப்படுகிறது. தேர்வை எழுதி முடித்தபின் நுழைவுச் சீட்டு கிழிக்கப்படுவது போல் காதலும் தூக்கி எறியப்படுகிறது.

இதை என்னால் மாற்றவும் முடியாது, காதலை மீட்கவும் முடியாது. பின் எதைச் சாதிக்க இந்தக் கோவம்? தனக்குத் தோன்றும் தவறைச் செய்ய நினைக்கும் ஒருவன் அதற்கு ஒரு புனிதத்தின் சாயத்தைப் பூசி தப்பித்துக்கொள்ள நினைப்பதைத் தான் தவறு என்கிறேன். காம இச்சைகளுக்குக் காதலை பலியாக்கும் விஷமத்தன்மை வளர்ந்து வருகிறது. வெளிநாட்டுக் காதலையும் இன்றைய இந்தியக் காதலையும் ஒப்பிட்டுப் பார்க்கையில், என்னைப் பொறுத்தவரை, நான் நல்லவர்களின் தூதுவன் என சொல்லிக்கொண்டு திருடுபவனை விட நான் திருடன் தான் என ஒப்புக்கொண்டு திருடுபவன் தான் சிறந்தவன். இவனின் அடையாளம் தெரியும் என்பதால் தப்பித்துக்கொள்ள வழியுண்டு. அவன் கருப்பு ஆடு என்பதால் கண்டுபிடிப்பதே கடினம்.

இதற்காக இந்தியர்கள் அனைவரும் அயல்நாட்டுக் கலாச்சாரத்தைப் பின்பற்ற வேண்டும் எனக் கூறவில்லை நான். காதலிக்கிறேன் எனச் சொல்லி அப்பாவிகளிடம் விளையாடாமல் ‘இது Dating தான்’ எனச் சொல்லிவிட்டால் இந்தியாவின் நிஜக் கலாச்சாரத்தைப் பின் தொடர்பவர்களுக்கு எந்தத் தொந்தரவும் இருக்காதல்லவா!

Tags:

Love , Youngsters , Modern Love , Youth , Dating , Romance , Relationship , True Love , Lovers

தமிழுக்குக் கட்-அவுட்!

ஜில்லென்ற ஒரு காலை. எழுந்து குளித்துவிட்டு வேலைக்கு வழக்கம்போல் புறப்படுகிறான் உயர்திரு பொதுஜனம். வீட்டை விட்டு வெளியில் வந்து பார்த்தவனுக்கு அதிர்ச்சி. எப்போதும் ஆங்கிலத்தில் பளிச்சிடும் பல விளம்பர போர்டுகள் தமிழுக்கு மாறி இருந்தன. ஏதேனும்  காரணமாக இருக்கும் என நினைத்துக்கொண்டு ஆபீசுக்குப் புறப்பட்டான். உள்ளே சென்று “Excuse me” என்றவனுக்கு “உள்ள வாங்க” என்று பதில் வந்தது. அதுதான் அவனுக்கு உலக அதிசயம். அதுவரை அவனுடைய Boss தமிழில் பேசி அவன்  பார்த்ததே இல்லை. இத்தனைக்கும் அவர் ஒரு தமிழர். பின் மதிய வேலையில் அவன் கம்பெனியில்  இண்டர்வியூவுக்கு வந்திருந்தவர்களுக்கு Group Discussion சுற்று நடத்தப்பட்டது. அதில் மனதில் தோன்றுபவைகளைத் தமிழில் தான் கூற வேண்டும் என ஆணையிடப்பட்டது. மீண்டும் அதிர்ந்தான். அப்போது தான்  அவனுக்குப் புரிந்தது அன்று காலை முதல் அவன் பார்த்தது அனைத்துமே தமிழ் தான் என்று. திடீரென ஒரு நாள் இப்படி எல்லாம் நடந்தால் எப்படி  இருக்கும்? ஆம், இதுவரை கூறியதெல்லாம் கனவு தான்! வீட்டுக்கு வந்த  விருந்தினருக்குப் பஞ்சு மெத்தையைக் கொடுத்துவிட்டு மண் தரையில் தான் படுத்துக்கொள்ளும் பழக்கம் தமிழனுக்கு இயல்பாகவே உண்டு. பழக்க தோஷத்தில் அதே முறையை மொழி விஷயத்திலும் பின்பற்றி விட்டது தான் வேதனை.

தமிழுக்காக நாம் பேசியது அதிகம். மிக  அதிகம். பேச்சுக்கு நன்றாகக் கை தட்டுகிறார்களா என  பார்த்துவிட்டு மகிழ்ச்சியாக மேடையை விட்டு இறங்கி வந்தவர்களே நம் மண்ணின் மைந்தர்கள். அப்படி அவர்கள் ஒவ்வொரு முறை இறங்கி வந்த போதும் அவர்களோடு தமிழும் கீழே இறங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கிலம் நம்மை அடிமைப்படுத்தத்  தொடங்கியிருக்கிறது. நம்முடைய அடையாளம் தமிழ் தான் என்ற எண்ணம் நமக்கு இல்லாமல் போனது தான் இதற்குக் காரணம். ஒரு வைத்தியத்துக்காக நாங்கள் ஐதராபாத்துக்குக் போயிருந்தோம். அங்கு நான் மருத்துவமனையில் கண்ட காட்சி என்னை அதிசயிக்க வைத்தது. அப்படி என்ன பெரிய காட்சி என்கிறீர்களா? அங்குள்ள மருத்துவர்கள் அவர்களுக்குள் தங்கள் தாய்மொழி தெலுங்கில் பேசிக்கொண்டிருந்தார்கள். இது எனக்கு ‘அதிசயமாக’ தெரிந்ததற்குக் காரணம் அப்படி ஒரு காட்சியை இங்கு  நான் கண்டதே இல்லை. நம்மவர்கள் எல்லாம் பெரிய  இடத்தையோ பெரிய பதவியையோ அடைந்துவிட்டால் அவர்களுக்குள்  ஆங்கிலத்தில் உரையாடுவது தான் கௌரவம் என  நினைப்பார்கள். தமிழ் தெரியாத மக்கள் வந்தாலும் அவர்களும் ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பார்களே தவிர அவர்களுக்காகக் கூடத் தமிழில் பேச மாட்டார்கள். கெத்து குறைந்து விடுமாம்!

தூரத்தில் இருப்பதை  அழகாகவும் நம் பக்கத்தில் இருப்பதை அசிங்கமாகவும்  நினைக்கும் மனநிலை தமிழனுக்கு எப்படி வந்தது எப்போது வந்தது என்பது தான் தெரியவில்லை. இப்போது கூட தமிழுக்கு இங்கு மரியாதையே இல்லை என்று சொல்லிவிட முடியாது. இருக்கிறது.. மேடைகளில் மட்டும்! ‘வணக்கம்’ என்று  சொன்னாலே மயங்கிவிடும் தமிழன், அதன் பிறகு  முழுவதும் ஆங்கிலத்தில் பேசினாலும் கைதட்டி  ரசிக்கிறான். மற்ற மாநிலங்களிலும் ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது. அலங்காரத்துக்காக அவ்வப்போது பயன்படுத்தப்படுகிறது. இங்கு தமிழே அலங்காரத் தோரணம் தான். தமிழ்நாட்டிலேயே  பிறந்து வளர்ந்து வாழ்பவர்கள் கூட பெரிய மேடைகளைப் பார்த்தவுடன் ஷேக்ஸ்பியரின் பேரன்களாக மாறிவிடுவதைப் பார்க்கும்போது ஆத்திரமாக வரும். ஆனால் நம்முடைய பெயரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அமைதியாக இருக்க வேண்டியிருக்கிறது. இதற்காக ஒரு வார்த்தை கூட  ஆங்கிலம் கலக்காமல் செந்தமிழில் நாடகம் நடத்தச் சொல்லவில்லை. நான் மட்டும் பெரிய  பதவிகளில் இருந்திருந்தால்/எதிர்காலத்தில் இருந்தால், தமிழர்கள் கூடும் முக்கிய மேடைகளில் விருந்தினர்களும் விழா நடத்துபவர்களும் தமிழில் தான் பேச  வேண்டும் என சட்டம் போட்டிருப்பேன்/போடுவேன். இதுவும் தமிழை வைத்துப் பேர் வாங்க நினைக்கும் மேஜிக் பேச்சு அல்ல. மற்ற ஊர்களில் அவர்கள் தாய்மொழிக்குக்  கொடுக்கும் மதிப்பு என்னை மனம் திறந்து பேச வைக்கிறது. உண்மைகளை உளற வைக்கிறது என்று கூட வைத்துக்கொள்ளலாம். இதெல்லாம் உண்மையில் நடக்காது என்பதால்தானோ என்னவோ, நடப்பது போல் ஒரு கனவுக் காட்சியுடன் இதை எழுதத் தொடங்கினேன். என் அருமை மக்கள் தமிழில் பேசுவதில்லை என்பதை விட தமிழில் பேசுபவனை  எவ்வளவு ஏளனமாகப் பார்க்கிறார்கள் எப்படிக் கேவலமாய் நடத்துகிறார்கள்  என்பது தான் என் முதல் கோபம். அவன் என்ன தவறு  செய்தான் அவனைப் பார்த்து  நீங்கள் சிரிப்பதற்கு? தாய்  தந்தையின் பெயரை Initial ஆக வைத்துக்கொண்டது தான் அவன் செய்த தவறா? உயர் பதவிச் சீமான்களே.. இனிமேலாவது தமிழில் பேசுபவனை வெளிநாட்டுக்காரனென நினைத்து வெறிக்கப் பார்க்காதீர்கள். அவன் தான் உண்மையில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன்!

தமிழா.. நீ என்ன தான் இப்படியெல்லாம் வெளியில் தமிழை அவமானப்படுத்தினாலும் ஒரு விஷயத்தில் தமிழிடம் தோற்று விடுகிறாய். பேசுவது  ஆங்கிலமாக இருந்தாலும் அதை நீ மனதுக்குள் யோசிப்பது தமிழில் தான்!

மறுக்கப்படாத வாய்ப்புகள்!

நமது சமூகத்தில் யார்  யாருக்கெல்லாம் நீதி  மறுக்கப்பட்டிருக்கிறது என்பது பற்றி பல  பட்டிமன்றங்கள் நடைபெற்று இருக்கின்றன. நீதி என்பது  அடிப்படை உரிமை சார்ந்த  விஷயம். அது பல காரணங்களுக்காக  மறுக்கப்பட்டாலும் அதையெல்லாம் தாண்டி  எப்படியோ முன்னுக்கு வந்து படித்து  முடித்த பிறகு வேலை தேடும் படலம் தொடங்கும். சமுதாயத்தின் பல முகங்கள் வெளிப்படும்  நேரம் இது. ஆச்சர்யமும்  அதிர்ச்சியும் கலந்த ஒரு  உணர்வை நமக்குப் பரிசளிக்கும்  தருணம்.

ஆங்கிலத்தில் ‘Recommendation’ என்று சொல்வோமே.. அந்தப் பரிந்துரை மட்டும் ‘பெரிய’ ஆட்களிடம் இருந்து கிடைத்து விட்டால் நாம் விரும்பும் பதவி நம்முடையது. துரதிருஷ்டவசமாக  அப்படிப்பட்ட வாய்ப்புகள் பெரும்பான்மையானவர்களுக்குக் கிட்டுவதில்லை. வேலையில்லாத்   திண்டாட்டத்தைப் பற்றி பல  கட்டுரைகளில் பலர்  பேசியாகிவிட்டது. எனவே  எனக்கு ஏற்பட்ட  அனுபவங்களை இங்கு  பகிர்ந்துகொண்டால் அது பல  விதைகளுக்கு விழிப்புணர்ச்சி  தரும் என்று தோன்றுகிறது. Physically Challenged ஆன எனக்கு  படித்து முடிக்கும் வரை அதில்  இருக்கும் சிக்கல்கள் புரியவில்லை. என் தாயின் தன்னம்பிக்கை  டானிக்குகளை குடித்தே வளர்ந்த நான் என்னை  மற்றவர்களிடம் இருந்து  வித்தியாசப்படுத்திப் பார்த்ததே இல்லை. எனக்கு  வாய்த்த நண்பர்களும் இதற்கு  மிக முக்கியக் காரணம். ஏன்  அங்கெல்லாம் என் உடல்நிலையால்   எனக்கு எந்த இடைஞ்சல்களும்  ஏற்படவில்லை என்பது எனக்கு  அப்போது புரியவில்லை. அதிலும் பள்ளியில் என்  திறமைகளுக்காக எனக்கு  இலவசக் கல்வி வழங்கப்பட்டது  நான்  செய்த பாக்கியம்.

புத்தகப் படிப்பு முடிந்து  நிஜ வாழ்க்கை  தொடங்கியபோது தான்  சோதனைகளும் தொடங்கியது. ஒவ்வொரு முறை  இன்டர்வியூவுக்காகச்  செல்லும்போதும் அங்கு பல  ரவுண்டுகள் நடத்துவார்கள். இன்று நமது கனவு  நிறைவேறிவிடும் என்ற  நம்பிக்கையில்  அவைகளிலெல்லாம் கலந்து கொள்வேன். என் நல்ல  நேரமோ அவர்களின் கெட்ட நேரமோ, அந்த தகுதிச் சுற்றுகளில் தேர்வும் ஆகி  விடுவேன். கடைசியில் தான் “HR Interview” எனப்படும் நேரடி  உரையாடல் சுற்று வரும். இண்டர்வியூ எடுக்க வந்திருக்கும்  கம்பெனியைச்  சேர்ந்தவரிடம் நாம் நேருக்கு நேர் பேசி நம்மை  அறிமுகப்படுத்திக்கொண்டு  நம்மைப் பற்றி அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு  பதிலளிக்க வேண்டும். அதில்  அவர்கள் திருப்தி அடைந்தால்  உடனடியாக வேலை  கிடைத்துவிடும். உள்ளே  சென்றவுடன் மிகவும் கனிவாக அவர்கள் நடந்து  கொள்வதைப் பார்த்து “இந்த முறை உறுதி” என மனதுக்குள்  நினைத்துக்கொள்வேன். Resume எனப்படும் தன் விவர  குறிப்புகளை இன்முகத்துடன்  வாங்கிப் பார்ப்பார்கள். என்னைப் பற்றியும் குடும்பம் பற்றியும் விசாரிப்பார்கள். அஞ்சாமல் தைரியமாகப் பேசும் குணமுடைய நான்  சளைக்காமல் அனைத்துக்கும்  பதில் கூறிவிடுவேன். “எல்லாம்  ஓகே. எனக்கு உன்னுடைய  தைரியமும் தன்னம்பிக்கையும்  பிடித்திருக்கிறது. ஆனால்  உன்னை இந்த வேலையில்  சேர்த்துக்கொள்வது பற்றி எங்கள்  உயரதிகாரியிடம் கேட்க வேண்டும். அவரிடம் பேசிவிட்டு ஒரு 3 நாட்களுக்குள் நாங்களே  உனக்கு கால் செய்கிறோம்” -இந்த  வார்த்தைகளை முதன்முதலில்  கேட்கும்போது அவை எனக்குப்  புதிதாகவும் உண்மையாகவும் தோன்றின. இன்று இவை தான் எனக்கு  மிகவும் பழைய, பழகிய  வார்த்தைகள். கொடுக்கும்  வேலைகளை என்னால் சரியாக  செய்ய முடியும் என்று  எவ்வளவு எடுத்துரைத்தாலும்  அவர்கள் மனதுக்குள் ஏதோ ஒரு  பயம். பள்ளி கல்லூரியில் எல்லாம் எனக்கு எந்த வேறுபாடும்  காட்டப்பட்டதில்லயே, இப்போது மட்டும் என்? என என்னை  நானே பலமுறை  கேட்டிருக்கிறேன். பின்பு தான்  தெரிந்தது. அங்கெல்லாம்  பணத்தை நம்மிடம் இருந்து  வாங்கிக் கொள்ளும் நிலைமை  அவர்களுக்கு, இங்கு  அவர்களல்லவா நமக்குப் பணம்  கொடுக்க வேண்டும்! அதனால் தான் எதற்கு Risk எடுக்க வேண்டும் என்று  யோசிக்கிறார்கள். உயர் அதிகாரியிடம்  பேசிவிட்டு சொல்கிறேன் என  கூறிவிட்டுச் சென்ற ஒருவர் கூட  திரும்ப அழைத்ததே இல்லை. பொதுவாக திருமணத்துக்குத்  தான் இப்படி எல்லாம் ஆகும்  என்பார்கள். ஆனால் வேலை  விஷயத்திலயே இதை நான்  அதிகம் பார்த்துவிட்டேன். அதனால் திருமணத்தின் போது இந்த நிலை  வருகையில்  எனக்குப் பெரிய ஏமாற்றங்கள் இருக்காது. மாற்றுத் திறனாளிகள் அன்பாக  அரவணைக்கப்படுவது போல்  காட்டப்பட்டாலும் அன்பு வெறும்  வார்த்தைகளில் மட்டுமே உள்ளது என்பதற்கு நேரடி சாட்சி நான்.

இது இன்றைய நிலை தான். நாளை காலங்கள் மாறலாம் காட்சிகள் மாறலாம். வெளியில் அதிகம் தெரியாமல் இருந்த அவலத்துக்கு மேடையில் அரங்கேற்றம் செய்ய வேண்டும் என்ற என் ஆதங்கத்தின் விளைவு தான் இந்தப் பதிவு.